MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

கலைஞர் கருணாநிதி

  

பிறப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி பாய்ந்து கரை உயர்த்திய `திருக்கோளிலி' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில், 1924-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, புலவரும் - இசைக்கலைஞருமான திரு. முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. அவருக்கு முன் பிறந்த தமக்கையர் இருவர், அவர்களின் பெயர் பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு.

dmk
  

இளமைப்பருவம்:

திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக் கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். 1938-ம் ஆண்டு, கலைஞர் ஏழாம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.

விளையாட்டிலும் கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஹாக்கி அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளி ஹாக்கி அணியில் கலைஞர் பங்கு பெற்றிருந்தார். கிரிக்கெட்டும் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.

  

கலைஞரின் மன உறுதி:

பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான் சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னனுடன் திருவாரூர் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. பாதி தூரம் கடந்துவிட்டோம். ‘என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்’ என்றார் தென்னன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதிதான் நீந்த வேண்டும்’ என்று கூறினேன். இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எதையும் பாதியில் விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல், அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை” என்று தன்னுடைய இளம்பருவ வாழ்க்கை குறித்து தனது நேர்காணல் ஒன்றில் விவரித்திருக்கிறார் கலைஞர்.

  

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்:

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி, 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள், பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கி ஆணை வெளியிட்டார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்துகொண்டிருந்த கலைஞருக்கு, 14 வயது. தன்னுடைய கையில் தமிழ்க் கொடியை பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் மாணவர்களை ஒன்றிணைத்து திருவாரூர் தெருக்களில் ஊர்வலம் நடத்தினார்.

  

தமிழ்நாடு மாணவர் மன்றம்:

பின்னர், பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்துக்கு மாணவர்களைத் திரட்டுவதற்காக, 1939-ம் ஆண்டு, தனது 15-வது வயதில், ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்.

17 வயதில், ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.  கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம், திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோர் இந்த அணியில் இணைந்து செயல்பட்டனர்.

  

அரசியல் ஈர்ப்பு:

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நீதிக்கட்சியின் தலைவராக இருந்து செயல்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் இந்தி எதிர்ப்பு மேடைப்பேச்சு, கலைஞரைப் பெரிதும் ஈர்த்தது.‌ அதன் தாக்கத்தில் பள்ளி மற்றும் அதற்கு பின்பான இளமைப் பருவத்திலும் தீவிர பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். எழுத்து, பேச்சு, நாடகம் என்று பல்வேறு துறைகளிலும் தன்னை பட்டை தீட்டிக்கொண்ட கலைஞரின் திறமை மண்மூடிய விதையாக வேர்பிடித்து தழைத்தது.


dmk
  

முரசொலி நாளிதழ்

1942-ம் ஆண்டு, அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ ஏட்டில், கலைஞர் எழுதிய ‘இளமைப்பலி’ என்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு அண்ணாவை பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக சென்றிருந்த அவர், கலைஞரை அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். இதனால் உற்சாகமடைந்த கலைஞர், முன்பைவிடத் தீவிரமாக செயல்படத் தொடங்கினார்.

துண்டுப் பிரசுரங்கள், வெளியீடுகள் மூலம் பிரசாரம் செய்து வந்த கலைஞர், தன் பரப்புரைக்கென ஒரு அச்சிதழ் தொடங்கும் தேவையை உணர்ந்து, 1942 ஆகஸ்ட் மாதம் ‘முரசொலி’ இதழைத் தொடங்கினார். தொடக்கத்தில் வார இதழாக வெளிவந்த முரசொலி, 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாளேடாக மாற்றப்பட்டது. அதில், ‘சேரன்’, ‘மறவன் குரல்’ போன்ற பெயர்களில் அனல் தெரிக்கும் கட்டுரைகளை கலைஞர் எழுதினார். இதுவே, பின்னர் உடன்பிறப்புகளுக்கான கடிதமாக மாறியது. உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள், திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


dmk
  

திராவிடர் கழகம்:

1944ம் ஆண்டு நீதிக்கட்சியானது, பெரியாரின் தலைமையில், அண்ணா அவர்களின் தீர்மானத்தின் படி, “திராவிடர் கழகம்” என்ற பெயர் மாற்றத்துடன் செயல்பட தொடங்கியது. அதே ஆண்டு, கலைஞர் அவர்கள் “திராவிட நடிகர் கழகம்” என்ற நாடகக்குழு ஒன்றை துவக்கி, தான் எழுதிய நாடகங்களை அரங்கேற்றி அதில் நடித்தும் வந்தார்

  

பெரியாரின் நேரடிப்பார்வையில் தீவிர அரசியலில் ஈடுபட்ட கலைஞர், குடியரசு இதழில் தொடர்ச்சியாக கட்டுரைகள் தீட்டி, திராவிட அரசியலின் வளர்ச்சிக்கு பங்களித்தார். திராவிடர் கழகத்துக்கென கருப்பு நிறத்தின் நடுவே சிவப்பு வட்டம் என்ற அமைப்பில் தனிக் கொடி உருவாக்கப்பட்டது. கொடி உருவாக்கத்தின்போது சிவப்பு வண்ணம் இல்லாததால், பெரியாரின் குடியரசு இதழில் வேலை பார்த்து வந்த கலைஞர், குண்டூசியால் தன் விரலில் குத்திக்கொண்டு தன்னுடைய ரத்தத்தை எடுத்துச் சிவப்புப் பொட்டு வைத்தார்.


dmk
  

சட்டமன்றத்தில் கலைஞர்:

1957-ம் ஆண்டு, முதல்முதலில் குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார். அப்போது அவருக்கு 33 வயது.

    

கலைஞரின் முதல் சட்டமன்ற உரை, அனைவராலும் கவனிக்கப்பட்டது. தனது முதல் உரையில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசிய கலைஞர், பின்னர் இதற்காக 20 நாட்கள் போராட்டம் நடத்தி, பிரச்சனைக்கும் தீர்வு கண்டார். கலைஞர் முதன்முறை சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தி அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு.கிருஷ்ணாராவ், ஒரு காகிதத்தில், ‘Very Good Speech’ என்று எழுதி கொடுத்தார்.

இரண்டாவது முறையாக, 1962 சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சட்டப் பேரவை விவாதங்களில், எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடியவர் கலைஞர். ஒருமுறை, “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று கேள்வியெழுப்பிய கலைஞரைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” எனக் கேட்டார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. அதற்கு, “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள்? வாதாடுபவர்களும்தானே போகவேண்டும்?” என்று பதிலடி கொடுத்தார் கலைஞர்.

1967 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், முதல்முதலாக ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அப்போது, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அண்ணா அமைச்சரவையில், பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் கலைஞர். 1957ல் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த கலைஞர் தன் இறுதிவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.


dmk
  

முதலமைச்சர்:

1969-ம் ஆண்டு ஃபிப்ரவரி 3-ம் நாள், உடல்நலக் குறைவு காரணமாக, பேரறிஞர் அண்ணா இயற்கை எய்தினார். இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் கலைஞர். கலைஞருக்கு அப்போது 45 வயது. இதே ஆண்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் கலைஞர் தேர்வு செய்யப்பட்டார்.

1971-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், தன்னை எதிர்த்து நின்ற ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தைவிட, சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கலைஞர் பெற்ற வாக்குகள் 63,334.

  

தேர்தலில் தோல்வியைத் தழுவாதவர்:

1977, 1980 தேர்தல்களில் அண்ணா நகர் தொகுதியிலும், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம் தொகுதியிலும் 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2016 தேர்தலில், தன்னை எதிர்த்து நின்ற அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்தை, 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது, மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசமாகும். தனது வாழ்நாளில், 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட கலைஞர், ஒருமுறைகூட தோல்வியைத் தழுவியதில்லை.

  

தேர்தல் பயணம்:

ஆண்டு தொகுதி முடிவு
1957 குளித்தலை வெற்றி
1962 தஞ்சாவூர் வெற்றி
1967 சைதாப்பேட்டை வெற்றி
1971 சைதாப்பேட்டை வெற்றி
1977 அண்ணா நகர் வெற்றி
1980 அண்ணா நகர் வெற்றி
1989 துறைமுகம் வெற்றி
1991 துறைமுகம் வெற்றி
1996 சேப்பாக்கம் வெற்றி
2001 சேப்பாக்கம் வெற்றி
2006 சேப்பாக்கம் வெற்றி
2011 திருவாரூர் வெற்றி
2016 திருவாரூர் வெற்றி
  

பதவி விலகல் – பதவி நீக்கம்:

1983-ல் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக, 1986-ம் அண்டு டிசம்பர் மாதம், 10 தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

  

இருமுறை ஆட்சிக் கலைப்பு:

1975, ஜூன் 25 நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 1976, ஜனவரி 31-ம் தேதி, கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடப்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி. அதே நாளன்று, 25,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு மிசா சட்டத்தின் கீழ் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.

திமுக, ஸ்தாபன காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், சோஷலிஸ்ட், ஆர்.எஸ்.எஸ் எனப் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டின் அனைத்து மத்தியச் சிறைகளிலும் அடைக்கப்பட்டார்கள். இந்தச் சிறைகளிலேயே சென்னை மத்தியச் சிறை சித்திரவதைக் கூடமாக மாறியது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, எம்.ஆர்.ராதா, ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு எனப் பலரும் சிறைச்சாலையில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினர். அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு, சிறையிலேயே மாண்டார். நெருக்கடி நிலையால், கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதிகம் பாதிக்கப்பட்டது.

1956-ம் ஆண்டு முதல், இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கலைஞர், 23-8-1990 அன்று, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதையடுத்து, இந்திய அரசின் ரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு தெரிவித்ததாகவும், போராளிகளுக்கு அடைக்கலம் அளித்து அவர்களை கட்டுப்படுத்தத் தவறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம், கழக ஆட்சி இரண்டாவது முறையாகக் கலைக்கப்பட்டது.


dmk
 

ஓய்வு:

2016, அக்டோபர் மாதம் தலைவர் கலைஞரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நுரையீரல் மற்றும் தொண்டைத் தொற்று காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு, உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்.

  

இந்நிலையில், 2018 ஜூலை 18-ம் நாள், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரது கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த, ‘டிரக்கியோஸ்டமி’ என்ற செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது. ஜூலை 28-ம் நாள், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட கலைஞர், ஆகஸ்ட் 7-ம் நாள் மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

  

இறப்புக்கு பிறகும் இட ஒதுக்கீடு போராட்டம்:

நீதிக்கட்சி காலம் முதற்கொண்டு, தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும், இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்காகவும் எத்தனையோ போராட்டங்களில் ஈடுபட்டவர் கலைஞர். இந்தப் போராட்டங்களை முன்னெடுத்ததற்காக, இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தவர். மக்களுக்காகப் போராடி, பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர்.

“அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா"

என்று கண்ணீர் மல்க இறங்கற்பா எழுதினார் கலைஞர்.

அண்ணாவின் அருகில் உறங்கவேண்டும் என்பது கலைஞரின் கனவுகளில் ஒன்றாக இருந்தது. இதை நிறைவேற்றும் முகமாக, பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்கக் கோரி, தமிழக அரசை நேரில் சந்தித்து முறையிட்டார்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க அ.தி.மு.க அரசு மறுத்துவிட்டது.

தகவல் அறிந்த தி.மு.க உடன்பிறப்புகள், கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இட ஒதுக்கீடு கேட்டுத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“இறந்த பிறகும் இட ஒதுக்கீடு போராட்டம்” என்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் #Marina4Kalaignar என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் பரவி செய்தியானது.

இதனிடையே, கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கக் கோரி, தி.மு.க தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், “அண்ணா நினைவிடத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன்
இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் ”
  

என்ற வாசகம் அடங்கிய பேழையில், அண்ணாவின் அருகே ஓய்வுகொண்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.

திராவிட முன்னேற்றக் கழகம்