MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

தி.மு.க. வரலாறு

திராவிட இன மக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாதுரை அவர்கள், 1949 ஆம் ஆண்டு - செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க) தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், சமூகநீதி மறுமலர்ச்சியின் வரலாறாகும். தமிழ் மொழியையும், தமிழர் தம் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்த ஓர் அரசியல் இயக்கம் நடத்திய நூற்றாண்டு போராட்டங்களின் தொகுப்பாகும்.


varalaru

தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் அவர்கள் பரவலாக இடம் பெறவும், அரசு பதவிகளிலும், இயக்கங்களிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 20.11. 1916 அன்று தொடங்கிய தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும். 1917 முதல் இச்சங்கம் ஆங்கிலத்தில் “ஜஸ்டிஸ் பார்ட்டி” என்றும் தமிழில் “நீதிக்கட்சி” என்றும் அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதோரின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே நீதிக்கட்சியின் முக்கிய நோக்கம்.

காங்கிரஸ் கட்சியில் நிலவிய பிராமண ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர இந்து சனாதன கோட்பாடுகளிலும் வெறுப்படைந்த தந்தை பெரியார் என பின்னாளில் போற்றப்பட்ட ஈ.வெ.இராமசாமி அவர்கள் 1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, பிறகு நீதிக் கட்சியின் தலைவரானார். வரலாற்றுச் சிறப்பு மிக்க “அண்ணாதுரை தீர்மானத்தின்” மூலம் 1944-ல் நீதிக்கட்சியின் பெயர் “திராவிடர் கழகம்” என்று மாற்றப்பட்டது. அந்த காலகட்டங்களில், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற முன்னணி தலைவர்கள் இயக்கத்தின் குறிக்கோள்களை, கொள்கைகளை அழகு தமிழில் நாடெங்கும் சூறாவளிப் பிரச்சாரம் மூலம் பரப்பினர். தந்தை பெரியாருக்கும் - அறிஞர் அண்ணா மற்றும் முன்னணி தலைவர்களுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டானதால், அண்ணா தலைமையில் பல தலைவர்கள் வெளியேறினார்.


varalaru

திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17-இல் திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தோற்றுவிக்கப்பட்டது. அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிஞர் அண்ணாவின் இலட்சியத்தையும், அவர் ஏற்றிய கொள்கை தீபத்தையும் தொடர்ந்து காத்து வந்த கலைஞர் என போற்றப்படும் மு.கருணாநிதி அவர்கள் கொள்கை பரப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அறிஞர் அண்ணாவின் `திராவிட நாடு’, கலைஞரின் `முரசொலி’ ஆகிய ஏடுகள் மக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்களிடையேயும் புதிய விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி தி.மு.கழகத்தின் வாளாகவும் கேடயமாகவும் வலம் வந்தன. கழக இலட்சியங்களை அடைய நியாயமான, அரசியல் சட்டத்திற்குட்பட்டு போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்கள் தனது தம்பியரை ‘‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற தாரக மந்திரம் மூலம் கட்டுக்கோப்பான பாதையில் நடத்திச் சென்றார்.

1957 பொதுத் தேர்தலில் தி.மு.க. 15 சட்டமன்ற இடங்களிலும், 2 நாடாளுமன்ற இடங்களிலும் வெற்றி பெற்றது. அசைக்க முடியாது என ஆணவ முரசு கொட்டிய காங்கிரஸ் கோட்டையில் கீறல்கள் உருவாயின. கட்சி துவங்கப்பட்ட பதினெட்டே ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது தி.மு.க.

1967 முதல் இன்று வரை நவீன தமிழகத்தின வளர்ச்சிக்காகவும், சமூக நீதி சமத்துவத்திற்காகவும், அனைத்து துறைகளிலும் கழகம் ஆற்றிய பணிகள், இன்று தமிழகத்தை இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாநிலங்களில் முதன்மையான மாநிலமாக மாற்றி இருக்கிறது. சுருங்கச் சொன்னால், கழகத்தின் ஆட்சியே, தமிழகத்தின் பொற்காலம்!

1969ல் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, டாக்டர் கலைஞர் அவர்களைத் தலைவராகவும், பேராசிரியர் க.அன்பழகன் பொதுச் செயலாளராகவும், கொண்ட மாபெரும் இயக்கமாக விளங்கி வந்தது. தி.மு.க.விற்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 60,000-க்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உள்ள ஒரே கட்சி தி.மு.க மட்டுமே.

stalin

5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சரும், இந்திய அளவில் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக விளங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதி மறைவெய்தியதற்கு பிறகு நடைபெற்ற கழக பொதுக்குழுவில் அவரால் அடையாளங்காட்டப்பட்டவரும், “உழைப்பு” “உழைப்பு” “உழைப்பு” என்று தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், திரு. துரைமுருகன் அவர்கள் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த தேர்வை பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் அறிவித்தார்.

தமிழக அரசியலில் மட்டுமின்றி, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் காப்பாற்றப்பட தேசிய அளவிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பணிகளையும், முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். மிக முக்கியமாக மக்களாட்சியின் அடிப்படையில் உட்கட்சி தேர்தல்களை முறைப்படி தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே!

திராவிட முன்னேற்றக் கழகம்